ஐபிஎல் 2026 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் குறித்த வதந்திகளுக்கு அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் காரணமாக, சென்னையில் நடைபெற வேண்டிய சிஎஸ்கே போட்டிகள் எம்.எஸ்.தோனியின் சொந்த ஊரான ராஞ்சிக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இதனால் சென்னை ரசிகர்கள் பெரும் கவலையடைந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த காசி விஸ்வநாதன், போட்டிகளை இடமாற்றம் செய்வது குறித்து ஐபிஎல் நிர்வாகத்திடமிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அல்லது வழிகாட்டுதலும் வரவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். சிஎஸ்கே அணி தனது சொந்த மண்ணான சேப்பாக்கத்திலேயே விளையாட விரும்புவதாகவும், பிசிசிஐ-யின் இறுதி அட்டவணைக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சீசனில் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்பதை உறுதிப்படுத்திய அவர், அணியில் தோனியின் பங்களிப்பு (பேட்ஸ்மேன் அல்லது இம்பாக்ட் பிளேயர்) குறித்து பயிற்சியாளர் மற்றும் கேப்டன் முடிவெடுப்பார்கள் என்று கூறினார். ராஞ்சிக்கு போட்டிகள் மாற்றம் என்ற தகவல் வெறும் வதந்தியே எனத் தெரிந்ததும், மஞ்சள் உடை ரசிகர்கள் தற்போது பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
