விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அதிமுக- பாஜக கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி என விமர்சித்துள்ளார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எங்கள் கூட்டணி பற்றி கூற அவர் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக திருமாவளவன் கூறியதாவது, நான் அதிமுக- பாஜக இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டும் என கூறவில்லை. திராவிட இயக்கமாக உள்ள அதிமுக, பாஜகவால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் கூறினேன்.

மேலும் அதிமுக வலுவாக இருந்தால் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. அவர்கள் கால் ஊன்றிய இடம் எல்லாம் மக்களை எப்படி ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுப்படுத்தி வருகிறார்கள் என்பது அனைவரும் அறிவர்.

அவர்கள் பொதுமக்களின் அடிப்படை வசதிக்காக போராடாதவர்கள், எளிய மக்களுக்காக குரல் கொடுக்காதவர்கள், மக்களை மதம், ஜாதி என்ற பெயரில் பிரிவுபடுத்த பார்ப்பவர்கள் அவர்களது கூட்டணி தமிழகத்திற்கு நல்லது அல்ல என தோழமையோடு சுட்டிக்காட்டினேன்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் நான் யார் என்பதை அறியாமல் இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியல் தம்பியாக களத்தில் பணியாற்றியவன் நான் என்பது அதிமுகவில் உள்ள அனைவருக்கும் தெரியும். நான் கூட்டணியில் இருந்து விலகிய போது கூட ஜெயலலிதா, தம்பி எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தி வழி அனுப்பினார்.