தலைநகர் டெல்லியில் உள்ள பீராகர்கி மேம்பாலம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்த ஒரு காரில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ரண்தீர், சிவ நரேஷ் மற்றும் லட்சுமி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த மரணங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, பண மழை பொழிய வைப்பதாகக் கூறி கம்ருதீன் பாபா என்ற சாமியார் அவர்களை ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்தது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான இந்த சாமியார், 2 லட்சம் ரூபாயைச் சடங்குகள் மூலம் 3 லட்சம் ரூபாயாக மாற்றித் தருவதாக ஆசை காட்டி அவர்களை நம்ப வைத்துள்ளார்.
பணத்தைப் பறிக்கும் நோக்கில் அவர்களுக்கு விஷம் கலந்த லட்டுகள் மற்றும் மயக்க மருந்து கலந்த குளிர்பானங்களைக் கொடுத்து அவர் கொலை செய்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, காருக்குள் நான்காவதாக ஒரு நபர் இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த நபரே கம்ருதீன் பாபா என்பதை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். முதலில் குற்றத்தை மறைக்க முயன்ற அவர், பின்னர் தனது கொடூர செயலை ஒப்புக்கொண்டார்.
கைதான கம்ருதீன் பாபா ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும், இதே பாணியில் சுமார் 6 முதல் 7 பேரை அவர் கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பொதுமக்களின் ஆசையைத் தூண்டி பணத்திற்காக உயிர் பறிக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
