
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் டொனால்ட் டிரம்ப் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 104 பேர் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் கடத்தப்பட்டதில், பஞ்சாப்பை சேர்ந்த லவ் பிரீத் கவுர்(30) என்ற பெண்ணும் ஒருவர். இவர் பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது கணவன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். எனவே அவரை பார்ப்பதற்காக இடைத்தரகர் ஒருவரிடம் கடந்த மாதம் 2ம் தேதி தனது 10 வயது மகனுடன் சட்டவிரோதமாக சென்றுள்ளார். இதையடுத்து அவர் தனது மகனுடன் அமெரிக்கா சென்ற 25 நாட்களுக்குள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது, எங்களை அமெரிக்காவுக்கு நேரடியாக அழைத்துச் செல்வதாக இடைத்தரகர் ஒருவர் கூறியதன் மூலம் அவரிடம் ரூ.1 கோடி கொடுத்தோம். எனது கணவர் அனுப்பிய பணம் மற்றும் விவசாய நிலத்தை அடமானம் வைத்து பணத்தை திரட்டி கொடுத்தோம். இடைத்தரகர் சொன்னபடி நானும், எனது மகனும் அமெரிக்காவுக்கு புறப்பட்டோம். முதலில் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு சென்றோம். ஆனால் எல்லையில் அதிகாரிகள் எங்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் விமான மூலம் கொலம்பியா அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு 2 வாரங்கள் தங்க வைத்து, அதன் பிறகு எல்சல்வடார் சென்று அங்கிருந்து குவாத்தமாலாவுக்கு நடந்தே சென்றோம்.
அமெரிக்கா சென்ற போது, எங்களிடம் சிம் கார்ட், காதணிகள் மற்றும் வளையல் போன்ற சிறிய ஆபரணங்களை கூட அதிகாரிகள் கழற்ற சொன்னார்கள். 5 நாட்கள் முகாம்களில் தங்க வைத்து எங்களது இடுப்புகளில் இருந்து கால் வரை சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். பின்னர் எங்கு அழைத்து செல்கிறோம் என்று கூறாமல் விமானத்தில் ஏற்றி விட்டனர். அதன் பிறகு நாங்கள் இந்தியாவுக்கு வந்து இறங்கினோம். அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதைக் கேட்டு என் கனவுகள் எல்லாம் ஒரே நொடியில் நொறுங்கிப் போனது என்று கூறினார்.