மகராஷ்டிராவில் நாக்பூரை சேர்ந்த அக்ஷய் என்பவர் ரூ.300 கொடுத்து ஆன்லைனில் டீசர்ட் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் அந்த டி-ஷர்ட் தனக்கு பொருந்தவில்லை என்று தனது நண்பனான சுபமிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சுபம் ரூ.300 கொடுத்து அதை வாங்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அக்ஷயின் அண்ணனும் இதில் தலையிட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் சுபம் டி-ஷர்ட்டுக்கான பணத்தை அக்ஷையிடம் தூக்கி வீசி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்ஷய் மற்றும் அவரது அண்ணன் சுபமுடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சுபமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அக்ஷய் மற்றும் அவரது அண்ணன் இருவருக்கும் குற்றப் பின்னணி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.