தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். தற்போது நடிகர் விஜயுடன் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பல பிரபலங்கள் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் நடிகை ஆண்ட்ரியா மற்றும் நடிகர் சாந்தனுவின் கதாபாத்திரங்களை சரியாக பயன்படுத்த முடியாததை நினைத்து வருந்தியதாக நடிகர் சாந்தனு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று நினைத்த சாந்தனுவுக்கு படம் பார்த்த பிறகு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. படத்திற்காக 30 நாட்கள் ஷூட்டிங் சென்ற சாந்தனுவின் காட்சிகள் வெறும் 12 நிமிடம் மட்டுமே திரையில் இருந்தது. இதனால் நடிகர் சாந்தனு செம அப்செட்டில் இருந்துள்ளார். அதே சமயம் அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியாவுக்கும் மாஸ்டர் படத்தின் பெரிதாக ரோல் இல்லை. எல்லா கதாபாத்திரங்களையும் சரியாக பயன்படுத்தும் என்னால் உங்களுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் சரியான கதாபாத்திரத்தை தர முடியவில்லை என தன்னிடம் கூறி லோகேஷ் கனகராஜ் வருத்தப்பட்டதாக சாந்தனு தெரிவித்துள்ளார்.