மலேசியாவை சேர்ந்த நூருல் சியாஸ்வானி, 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு விரைவிலேயே, அவரது கணவர் திடீரென கார் விபத்தில் சிக்கி, கடுமையாக காயமடைந்தார். அந்த நிலையிலிருந்து, கணவரை முழுமையாக கவனித்து கொள்வது நூருலின் பொறுப்பாகி விட்டது.
டியூப் மூலம் உணவு கொடுப்பது, குளிக்க வைப்பது, உடை மாற்றுவது என குழந்தையைப் போல பராமரித்து வந்தார். 6 ஆண்டுகள் அன்புடன் கவனித்ததில், கணவரின் உடல்நிலை படிப்படியாக மேம்பட்டது. இந்த காலத்தில், இருவருக்கும் ஒரு மகனும் பிறந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு, கணவரை கவனித்த அனுபவங்களை நூருல் பேஸ்புக்கில் பகிர்ந்தார். அந்த பதிவுகள் பலரின் மனதை வருட, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரை பின்தொடர்ந்தனர்.
ஆனால், சமீபத்தில் நூருல் வெளியிட்ட பதிவொன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், தனது கணவர் வேறொரு பெண்ணான அய்பா ஐசமுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
அதிர்ச்சியை மறைத்த நூருல், அந்த பதிவில் கணவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தனது உடல்நலம் குணமடைந்ததும், கணவர் 2024 அக்டோபர் 6-ஆம் தேதி நூருலை விவாகரத்து செய்து, ஒரு வாரத்திற்குள் மறுமணம் செய்ததாகவும் நூருல் கூறினார். அதேசமயம், புதிய மனைவி அய்பாவிடம், தனது முன்னாள் கணவரை நன்றாக கவனிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்த தகவல் வெளியானதும், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. “ஒரு கணவராக தன் கடமையை அவர் செய்யவில்லை”, “6 ஆண்டுகள் உயிர் தியாகம் செய்த மனைவிக்கு இப்படி நடப்பது நன்றியின்மை” என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், “இவ்வளவு நாள் பராமரித்ததற்கான ஒவ்வொரு பைசாவையும் நூருலுக்கு கிடைக்க கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும்” எனவும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
மேலும், “நூருலுக்கு மதிப்பளிக்கும், நன்மை செய்யக்கூடிய ஒருவரை கடவுள் அருளட்டும்” என பலரும் பிரார்த்தனைகள் தெரிவித்துள்ளனர். 6 ஆண்டுகள் உயிர்ப்புடன் வாழ வைத்த மனைவியை விட்டு, மறுமணம் செய்த கணவரின் செயலால் மலேசியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இந்த சம்பவம் விவாதமாகி வருகிறது.
