உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் ஒரு கொடூரமான மனிதத் தன்மையற்ற சம்பவம் நடந்துள்ளது. ஜலால்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இரவில் சுவர் ஏறி குதித்து வந்த மூன்று பேர் அவரைக் வீட்டு மாடியின் மீது தூக்கிக் கொண்டு சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க, சிறுமிக்கு ஆசிட் கலந்த தண்ணீரை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றியுள்ளனர். இதனால், பலத்த காயமடைந்த சிறுமியின் நிலை மோசமடைந்துள்ளது.
சிறுமி அலறிய சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் ஓடி வந்தபோது, குற்றவாளிகள் மிரட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். உடனடியாகச் சிறுமியை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே நிலைமை மோசமானதால், அவர் ஜான்சி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.
அங்கும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் என்று கூறியதால், மீண்டும் ஹமிர்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடைசியாக, சிறுமியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், அவரை கான்பூர் ஹாலட் மருத்துவமனைக்கு (Kanpur Hallet) மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைத்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளதாகவும், மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
