நம்முடைய நாட்டில் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு பண்டிகை இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக கொண்டாடும் பண்டிகை தான் தீபாவளி திருநாள். தமிழகத்தில் கார்த்திகை மாதம் தீபத்திருநாளாக கொண்டாடப்படும் நிலையில் மற்ற மாநிலங்களில் தீபாவளி பண்டிகை தான் தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா வதம் செய்த நாள் தான் தீபாவளி பண்டிகையாகும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கறி சமைத்து சாப்பிடுவது தான் தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டம் ஆகும்.

தென்னிந்திய மாநிலங்களில் தீபாவளி ஒரு மாதிரியாக கொண்டாடினாலும் வட இந்தியாவில் சில மாநிலங்களில் ஸ்ரீ ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து தன்னுடைய குடும்பத்தோடு அயோத்தி நகரத்திற்கு திரும்பிய நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். இந்த கொண்டாட்டம் உத்திரப்பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், பீகார் மற்றும் அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாரம்பரிய பழக்க வழக்கமாக இருந்து வருகிறது.

இங்கு தீபாவளியன்று இரவில் மக்கள் லட்சுமி பூஜை செய்து ஒரு டம்ளர் பாலில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்து பூஜை செய்வார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் 1577 ஆம் ஆண்டு இந்த தினத்தில் தான் தங்களுடைய புனித திருத்தலமான பொற்கோவில் கட்டுமான பணியை தொடங்கியதால் அதனை கொண்டாட தீபாவளி திருநாளில் இரவில் சீக்கியர்கள் தங்களுடைய வீடுகளில் தீபங்களையும் மெழுகுவர்த்தையும் ஏற்றி வைத்து கொண்டாடுவார்கள்.

குஜராத்தில் தீபாவளி திருநாளை புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர். அந்த நாளில் புதிய சொத்துக்கள் வாங்குவது, புதிய தொழில்கள் தொடங்குவது மற்றும் அலுவலகங்கள் கடைகள் திறப்பது என நல்ல காரியங்களை செய்கின்றனர். தீபாவளி நாளன்று மாநிலம் முழுவதும் இரவில் தியா என்ற பெயரில் விளக்குகளை ஏற்றி வைத்து வழங்குவார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபாவளி பண்டிகை நான்கு நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் வித்தியாசமான பூஜைகளை செய்து லட்சுமிதேவியை வழிபட்டு தீபாவளியை கொண்டாடுவார்கள்.

மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி தனது எதிரிகளின் கோட்டையை தாக்கி கைப்பற்றியது இந்த தீபாவளி திருநாள் ஆகும். இதனால் இது தன திரயோதசி என்றும் தாந்தராஸ் என்றும் கொண்டாடப்படுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் தீபாவளி திருநாள் காளி பூஜையாக வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. காளி தேவியின் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு பூஜைகள் செய்யப்பட்டு தீபாவளி திருநாளை கொண்டாடுகின்றனர்.

கர்நாடகாவில் தீபாவளி மூன்று நாட்கள் கொண்டாடப்படும் நிலையில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் கொண்டாடுகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவி சத்தியபாமா நரகாசுரனை கொன்ற நாளாக கருதி தீபாவளி திருநாளை கொண்டாடுகிறார்கள். அந்த நாளில் சத்தியபாமாவின் களிமண் சிலைகளுக்கு பூஜைகள் மற்றும் பிராத்தனைகள் செய்து வழிபடுவார்கள்.

புத்த மதத்தினர் மாமன்னர் அசோக சக்கரவர்த்தி தனது அரச பதவியை முற்றிலும் துறந்து புத்த மதத்துக்கு மாறிய நாளை தீபாவளி திருநாளாக கொண்டாடுகிறார்கள்.