
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் நோ பார்க்கிங் வழியாக காரில் வந்த நான்கு பேர் செல்ல முயன்றனர். அந்த காரில் மொத்தம் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இருந்துள்ளன. அப்போது காரை மறைத்த பார்க்கிங் செக்யூரிட்டி ஏழுமலை, இது நோ பார்க்கிங் இந்த வழியாக செல்லக்கூடாது என்றும், வேறு இடத்தை காட்டி அங்கே காரை பார்க் செய்யுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனாலும் காரில் வந்தவர்கள் ஏழுமலை கூறுவதை பொருட்படுத்தாமல் விலகி நிற்குமாறு சத்தம் போட்டு மீண்டும் காரை நோ பார்க்கிங் வழியாக கொண்டு செல்ல முயற்சித்தனர். இதில் ஆத்திரமடைந்த செக்யூரிட்டி அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். உடனே காரில் இருந்து கோபத்துடன் இறங்கிய பெண் ஏழுமலையை சரமாரியாக தாக்க ஆரம்பித்தார். அதோடு அவருடன் வந்த 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர். இதனை பார்த்த வழிப்போக்கர்கள் அந்த 4 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.