
சென்னை, வடபழனி அருகே ராகவன் காலனியில் சினிமா துறையை சேர்ந்த போஜராஜா என்பவரின் வீடு அமைந்துள்ளது. இவர் கடந்த சில நாட்களாக மும்பையில் வசித்து வரும் நிலையில், இவருடைய வீட்டிற்கு பணியாளர்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து சுத்தம் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சுத்தம் செய்வதற்காக பணியாளர் ஒருவர் போஜராஜாவின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பணியாளர் உடனடியாக போஜராஜாவிற்கு தகவல் கொடுத்தார்.
அந்த தகவலின் படி மும்பையில் இருந்து போஜராஜா சென்னைக்கு வந்தார். அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்த போது 40 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி, 2 குத்து விளக்கு மற்றும் பூஜை சாமான்கள் காணாமல் போனது தெரிய வந்தது. போஜராஜா உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது எம்ஜிஆர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அதன்படி காவல்துறையினர் அவர்களை கைது செய்த நிலையில் அவர்களிடமிருந்து 450 கிராம் வெள்ளி, பூஜை சாமான்கள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.