தமிழகத்தில் பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்து, நாளை (டிசம்பர் 24) முதல் ஜனவரி 4-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரையாண்டு விடுமுறை நாட்களில் எக்காரணம் கொண்டும் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது” என அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
விடுமுறை என்பது மாணவர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காக அளிக்கப்படுவது என்றும், அவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும் வகையில் தனியார் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு குறித்துப் பேசிய அமைச்சர், தமிழகத்தில் இதுவரை 9,416 புதிய வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 7,898 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ள ஜாக்டோ ஜியோ (JACTO-GEO) அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், வரும் ஜனவரி 6-ம் தேதிக்குள் அவர்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 5-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
