இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மண்டி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று மேக வெடிப்புகள், நில சரிவுகளும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக மண்டி மாவட்டத்தில் உள்ள உள துனாங் நகரில் மாநில கூட்டுறவு வங்கி ஒன்று முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

இரண்டு மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் இந்த வங்கி செயல்பட்டு வந்தது. மழை வெள்ளத்தால் வங்கியின் ஒரு கதவு முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. அதோடு 2 கதவுகள் சேதம் அடைந்துள்ளன. மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள், கட்டிட இடிபாடுகள், சகதிகள் முதல் தளத்தை முற்றிலும் மூடியது.

இதனால் வங்கியில் உள்ள லட்சக்கணக்கான பணம் மற்றும் அடகு வைத்திருந்த நகைகள் என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வங்கியில் ஏராளமான வணிகர்கள் மற்றும் விவசாயிகள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தினசரி வரவு செலவு மேற்கொண்டு வந்துள்ளனர். எட்டாயிரம் மக்கள் இந்த ஒரு வங்கி தான் என்று கூறுகிறார்கள்.

இதனால் ஏராளமான பணம் மட்டும் இன்றி நகைகளும் இருக்கும் என்று கருதப்படுகிறது. சகதியில் மூழ்கி கிடக்கும் வங்கியில் இருந்து நகைகளை கொள்ளை அடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்குள்ள இடிபாடுகளை அகற்றிய பிறகுதான் சேதம் குறித்த முழுவிபரம் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.