பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது சமீப காலமாகவே அதிகரித்துவிட்டது. தமிழக அரசு இயற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது கூட்டணி கட்சிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா அரசு இயற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக அவர் மீது பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

முதல்வர் சந்திரசேகர் ராவ்க்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு என்பது அதிகரித்து விட்டது. இந்நிலையில் சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதால், மசோதாக்களுக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தெலுங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.