ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்காடு பகுதியில் சரஸ்வதி(82) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் சம்பூரணத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் சம்பூர்ணம் கூலி வேலைக்கு சென்ற பிறகு சரஸ்வதி சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குடிசை வீட்டில் பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் புகைமூட்டம் கிளம்பி மூதாட்டி வெளியே வர முடியாமல் சிரமப்பட்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் 43-எண் அரசு டவுன் பேருந்து அந்த வழியாக சென்றது. அப்போது குடிசையில் இருந்து புகை வருவதை பார்த்த டிரைவர் மனோகரன் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு உடனடியாக வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை மீட்டார்.

இதனால் மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 1 லட்ச ரூபாய் பணம், முக்கிய ஆவணங்கள், 4 பவுன் தங்க நகை ஆகியவை எரிந்து நாசமானது.

இதனை அறிந்த கொளாநெல்லி ஊராட்சி மன்ற தலைவர் பேபி செந்தில் குமார், கிராம நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வீட்டை பார்வையிட்டு சரஸ்வதிக்கு 20 கிலோ அரிசி, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளனர். மேலும் சரியான நேரத்தில் மூதாட்டியை காப்பாற்றிய அரசு பேருந்து டிரைவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.