திருநெல்வேலி மாவட்டம் மருதம்புதூர் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜேஸ்வரன் (26) என்பவர் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரியில் வீரவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தென் திருப்பவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த போது சாலையில் 4 கிராம் 900 மில்லி தங்கச் சங்கிலி கிடந்ததை கண்டார். உடனே அதனை எடுத்து முக்கூடல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

இந்த தகவலை அறிந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்பி பொன்ராஜேஸ்வரனின் நேர்மையை பாராட்டி எஸ் பி அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். இதேபோன்று நெல்லை மாவட்டம் தளவாய்புரம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (40) என்பவர் பணகுடியில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல் கிணறு நோக்கி சவாரி சென்ற நிலையில் அங்கிருந்து பனங்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் செல்போன் மற்றும் ரூ. 3 லட்சம் பணம் கிடப்பதைக் கண்ட அவர் அதனை எடுத்துச் சென்று பணகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த தகவலை அறிந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்பி நேர்மையான ஆட்டோ ஓட்டுனரான முத்துக்கிருஷ்ணனை எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று வரவழைத்து பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.