
நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்படும். அந்த வகையில் இன்று ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகு நாடு முழுவதும் தேசிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 46 சுங்க சாவடிகளில் 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட இருக்கும் நிலையில் இந்த கட்டண உயர்வு 2026 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதலின்படி, வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளின் ATM-களை மாதத்தில் 5 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தும் போதெல்லாம், தலா முதல் ரூ. 23 வரை கட்டணம் விதிக்கப்படும். இதுவே வாடிக்கையாளர்களுக்கு நிதிசார்ந்த சுமையாக இருக்கலாம்.
மேலும், வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நடைமுறையை பல வங்கிகள் மறுபரிசீலனை செய்து வருகின்றன. இதற்குட்பட்ட மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம். இத்துடன், Positive Pay System (PBS) எனப்படும் பாதுகாப்பு முறை, ரூ.50,000க்கும் மேற்பட்ட காசோலை பரிவர்த்தனைகளுக்கு கட்டாயமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மோசடிகளை தடுக்கும் வகையில் முக்கிய முன்னேற்றமாகும்.
UPI பரிவர்த்தனைகளிலும் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத மொபைல் எண்கள், ஏப்ரல் 1 முதல் UPI சேவையிலிருந்து நீக்கப்படவுள்ளன. இது, கடந்த காலத்தில் எண்ணை மாற்றியவையோ அல்லது செயலியை தவிர்த்துவிட்டவர்களோ மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், வங்கிகள் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்த AI chatbot, Two-Factor Authentication மற்றும் Biometric Verification அம்சங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளன. கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்கள் மற்றும் ரிவார்டுகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுவதால், வாடிக்கையாளர்கள் இவை பற்றி தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.