குப்பைகளை எரித்ததால் திருவாரூர்-கும்பகோணம் சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது.

திருவாரூர் மாவட்டத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கண்ணமங்கை பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்ற நிலையில் இந்த சாலை வழியாக அனைத்து வகை வாகனங்களும் ஏராளமாக சென்று வருகின்றது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் இவ்வழியாக சென்று வருகின்றார்கள். இந்த நிலையில் இப்பகுதியின் சாலையோரமாக பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் செல்லும் போது காற்று வீசும் நேரத்தில் குப்பைகள் பறக்கின்றது.

இது சாலையில் செல்லும் வாகனங்கள் மீதும் நடந்து செல்பவர்கள் மீதும் விழுகின்றது. இதனால் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை ஒரு சிலர் அவ்வபோது எரித்து விடுகின்றார்கள். இதனால் அந்த சாலை புகை மூட்டமாக காணப்படுகின்றது. அந்த வகையில் நேற்று முன்தினம் இந்த இடத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை எரித்துள்ளனர். இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் அவ்வழியாக சென்றவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.