சவுதி அரேபியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு  செய்திருக்கின்றன.  அதேபோலவே இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் சவுதி அரேபியாவில் வர்த்தகம் செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும், முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்கின்ற நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று சவுதி அரேபியா இளவரசர் முகமது சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதிலேயே மிகவும் முக்கியமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள பல்வேறு துறைமுகங்கள் மூலமாக இந்தியாவிலிருந்து, அந்த துறைமுகங்களுக்கான  கப்பல் வழித்தடங்களை வலுப்படுத்தி,  அந்த துறைமுகங்களில் இருந்து ஐரோப்பாவுக்கு சாலை மார்க்கமாக சரக்குகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய விரிவான திட்டம் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கும் உதவிகரமாக இருக்கும். வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

அதைவிட முக்கியமாக சைனா – பாகிஸ்தான் வழியாக அமைக்கும் வழித்தடங்களுக்கு போட்டியாகவும் இது இருக்கும் என கருதப்படுகிறது. ஆகவே ஜி-20 மாநாட்டிற்காக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா இளவரசர் முகமது சல்மான் அந்த கூட்டம் முடிந்த பிறகு,  இந்தியாவிலேயே தங்கி பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இன்று காலையில் அவருக்கு குடியரசு தலைவர் இல்லத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  அணிவகுப்பு மரியாதை மற்றும் குடியரசு தலைவர் மற்றும் அதிகாரிகள் அமைச்சர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து தற்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.