மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ரயில்வே அதிகாரி மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மரபில் சிட்டி மருத்துவமனையில் தனது தாயை சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது திடீரென அவருடைய தாய் மரணமடைந்ததால், சிகிச்சையில் பிழை இருப்பதாக சந்தேகம் அடைந்த மனோஜ் தனது தாய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் பற்றி விசாரித்தார்.

அப்போது டாக்டர் பிரித்ராஜ் என்ற பெயரில் வேலை பார்த்தவர் சத்யேந்திரா என்பது தெரிய வந்தது. அவர் தனது நண்பரின் ஆவணங்களை வைத்து சான்றிதழ்கள், படிப்பு, பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதாவது ஜபல்பூரில் வசித்து வரும் இவர் தனது நண்பர் பிரித்ராஜ் என்பவரின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பயன்படுத்தி, நீட் தேர்வில் வெற்றி பெற்று பழங்குடியினர் ஒதுக்கீட்டில் ஒரு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்.

அதன் பின் எம்பிபிஎஸ் முடித்து விட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்து வந்துள்ளார். ரயில்வே அதிகாரி மனோஜ் குமார் மூலம் இந்த உண்மை தெரிய வந்த நிலையில் காவல்துறையினர் சத்யேந்திரா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது தலைமறைவான சத்யேந்திராவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் கல்வி சான்றிதழ் மீதான சரியான சோதனை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.