பிரான்ஸ் நாட்டில் நாட்டு மக்களின் மொபைல் கண்காணிப்புக்கு உள்ளாக்குவது தொடர்பான அறிவிப்புக்கு எதிராக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சினிமாக்களில் குறிப்பிட்ட வில்லன்கள் அதீத குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிறகு அவர்களது மொபைல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் ? என்ன பேசுகிறார்கள் ? என்பது உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அவர்களை பிடிப்பதற்கான முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டிருப்பார்கள். தற்போது இப்படி ஒரு நிகழ்வை அரங்கேற்ற பிரான்ஸ் அரசு சட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, 

குற்றவாளிகள் மட்டுமின்றி காவல்துறையினர் சந்தேகிக்கும் நபர்களும் இந்த கண்காணிப்புக்கு கீழ் வருவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டு மக்களை காவல்துறையினர் இனி ரகசியமாக கண்காணித்து, மொபைலில் அவர்கள் பார்ப்பது, பேசுவது , குறுஞ்செய்தி அனுப்புவது என அனைத்தையும் வேவு பார்ப்பது என்பதாகும்.

இது தனி மனிதர்களின் சுதந்திரத்திற்கு பாதகம் விளைவிக்கும் விதமாக இருப்பதாகவும், இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்பட கூடும் எனவும் வழக்கறிஞர்கள் சிலரும் அந்நாட்டு மக்களும்  எதிர்வாதத்தை முன் வைத்துள்ளனர்.

மேலும் இது அந்நாட்டு மக்களிடையே மட்டுமல்லாமல் உலக அளவிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வர, உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் அவர்களும் மொபைல் போன் பாதுகாப்பற்றது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.