
உத்திரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள நிஜாம்பூர் கிராமம் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக கல்வி வரலாற்றில் சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது அந்த கிராமத்தில் வசித்து வரும் ராம் கேவல் என்ற மாணவர் அரசு பள்ளியில் பயின்று வந்தார். ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் தனது கடின உழைப்பின் காரணமாக கல்வியில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுவரை அந்த கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி தேர்வில் யாரும் தேர்ச்சி பெறாத நிலையில் தற்போது ராம் கேவல் இந்த சாதனையை செய்தது கிராமத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இவரின் வெற்றிக்கு காரணம் மாநில அரசு செயல்படுத்திய மிஷன் பெஹ்சான் திட்டம் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் உற்சாக ஊக்கமும் தான் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ராம் கேவலின் வெற்றியை மாவட்ட நிர்வாகம் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. மாவட்ட கலெக்டர் திரிபாதி ராம் கேவலுடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
“இது ஒரே மாணவனின் வெற்றி இல்லை….நிஜாம்பூர் கிராமத்தின் கல்வி வளர்ச்சியின் ஆரம்ப கட்டமே” என்று அவர் கூறினார். மேலும் ராம் கேவலின் வெற்றி அவரது கிராம இளைஞர்களுக்கான ஊக்கமாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.