திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்பெண்ணை ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன அடிக்கு 1,70,000 கண நீர் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படுகிறது. முழு கொள்ளளவை எட்டிய சாத்தனூர் அணை நிரம்பியதால் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் ஆற்றுக் கரையோரங்களில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்வையிட வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் நேரில் சென்றார். மேலும் கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை பார்வையிட முத்தையா நகருக்கு சென்றபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ காலில் இணைந்தார்.

அப்பகுதியில் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் உடனே தீவிர நடவடிக்கை எடுக்க கோரி அறிவுறுத்தினார். மேலும் உடனடியாக எம்எல்ஏ, மேயர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்ற வேண்டும் எனக் கூறினார். முதலமைச்சர் வீடியோ காலில் இணைந்திருப்பதை பொதுமக்களுக்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காட்டினார். உடனே முதலமைச்சர் பொதுமக்களிடம் யாரும் அச்சப்பட வேண்டாம் மீட்பு படையினர் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர் களத்தில் தீவிரமாக செயல்பட தமிழக அரசின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். வீடியோ கால் மூலம் முதலமைச்சர் கள நிலவரத்தை கேட்டறிந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.