பிரேசில் நாட்டில் சல்வேடார் நகரில் இருந்து சா பவுலோ நகருக்கு கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் ஒரு பெண் பயணி அமர்ந்திருந்தார். அவரிடம் சக பெண் பயணி ஒருவர் தன்னுடைய மாற்று திறனாளி மகளுக்காக ஜன்னல் ஓர இருக்கையை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ஜன்னல் ஓரத்தில் இருந்து அந்த பெண்மணி இருக்கையை தர மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் அடிதடியாக மாறியது. பிறகு அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சண்டையிடத் தொடங்கிவிட்டனர்.

இதனால் விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் அவர்களை தடுக்க முயற்சித்தனர். ஆனால் அது மிகவும் சிரமமாக இருந்ததால் விமான நிறுவனம் சண்டையிட்டுக் கொண்டிருந்த 15 பேரையும் உடனடியாக விமானத்தை விட்டு இறக்கியது. அதன் பின் சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இதனால் பிற பயணிகளும் மிகுந்த அவதி அடைந்தனர். இது குறித்து விமான நிறுவனம் கூறியதாவது “கடந்த 2ஆம் தேதி இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது. மேலும் மோதலில் ஏற்பட்ட அனைத்து பயணிகளும் உடனடியாக விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவம் நடந்ததற்காக நாங்கள் மிகவும் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.