இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இந்த முயற்சியை இந்திய ராணுவத்தினர் முறியடித்த நிலையில் அதன் பிறகு சீனா மற்றும் இந்தியா இடையே எல்லை தொடர்பாக மோதல் போக்கு ஆரம்பித்தது. அதன் பிறகு லடாக் பகுதியில் இருநாட்டு ராணுவமும் தங்கள் வீரர்களை நிறுத்தியது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் தொடர்ச்சியாக மோதிக்கொண்ட நிலையில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தான் இறுதியாக பேச்சு வார்த்தையில் உடன்பாடு என்பது ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சீனா மற்றும் இந்தியா என இரு அரசுகளும் தங்கள் ராணுவ வீரர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் வீரர்களை திரும்ப பெற்றுவிட்டது. இதைத்தொடர்ந்து இருநாட்டு ராணுவமும் எல்லையில் ஆய்வு செய்து உறுதி செய்யும். மேலும் எல்லையில் அமைக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்புகளும் அகற்றப்படும் என்று கூறினர்.
