கரூர் பேரிழப்பை அடுத்து தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (செப்.30) தனது X தளத்தில், “தமிழ்நாட்டில் புரட்சி உண்டாக்க வேண்டும்” என பதிவிட்டார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த பதிவை பின்னர் அவர் உடனடியாக நீக்கியிருந்தாலும், அதன் ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்த பதிவு கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், காவல்துறை அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஏற்கெனவே கரூர் கூட்ட நெரிசல் பேரிழப்பில் தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தவெக கட்சியை மேலும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. கரூர் சம்பவத்தைச் சுற்றி தொடர்ந்து கைது மற்றும் வழக்குப் பதிவு நடவடிக்கைகள் நடைபெறுவதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.