முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் நடவடிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தில் அரசு புதிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் நியமனம் பெற்றவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் இனி ரூ.1,000 பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை அதிகாரிகள், இத்தகைய பயனாளிகளை தனித்தனியாகக் கண்டறிந்து திட்டத்திலிருந்து நீக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். அரசு வேலைக்கு நியமனம் பெற்றுள்ளவர்கள் குடும்பம் தற்போது சமூகத்தில் நலமுடன் இருப்பதாக கருதப்படுவதால், உரிமைத் தொகை உதவிக்கு தகுதி இல்லையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்களுக்கு உண்மையான தேவையின் அடிப்படையில் நிதி உதவி சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
