மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டு, மொத்தம் 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், போட்டியிட விருப்பமுள்ளவர்கள் ரூ.50,000 கட்டணம் செலுத்தி விருப்பமனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற முக்கிய அரசியல் கட்சிகளில் விருப்பமனு கட்டணம் ரூ.10,000-க்கும் குறைவாகவே உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் இவ்வளவு அதிகத் தொகையை நிர்ணயித்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநில சுயாட்சி என்பது அரசியலமைப்பு வழங்கிய உரிமை. அதில் தலையிடுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.
ஆளுநர் தனது பதவியின் கண்ணியத்தைக் காப்பதோடு, தமிழக மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மத்திய ஆளுங்கட்சியான பா.ஜ.க-வை விமர்சித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை மநீம சாடியுள்ளது.
மக்களை ஜாதி, மத ரீதியாகப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை.
தமிழகம் வரும்போது தமிழை நேசிப்பதாகக் கூறும் பா.ஜ.க தலைவர்கள், பிற மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களில் தமிழர்களைத் தவறாகச் சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேடைகளில் தமிழில் பேசுவது ஒருபுறம் இருந்தாலும், தமிழ் வளர்ச்சிக்குக் குறைந்த நிதி ஒதுக்குவது, அகழ்வாய்வு அறிக்கைகளை முடக்குவது மற்றும் மறைமுகமாக இந்தியைத் திணிப்பது போன்ற செயல்களைச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் இந்தச் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், மநீம கட்சியின் அடுத்தக்கட்ட தேர்தல் வியூகத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
