தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில மருத்துவமனை களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இன்று மாலை புயல் கரையைக் கடக்கும் நிலையில் தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக அதிகமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் எதிரொலியாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மேலும் சுமார் 500 சிறப்பு மருத்துவமனைகள் நடைபெறும் நிலையில் ORS கரைசல், நிலவேம்பு குடிநீர், காய்ச்சல், சளி மற்றும் சேற்றுப்புண் ஆகிய மருந்துகளை அளவுக்கு அதிகமாக கையிருப்பு வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது..