தமிழ்நாட்டில் 2021 மே மாதத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பகுதியாக, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்து, மொத்தம் ரூ.18,498 கோடி மதிப்பிலான தொழில் ஒப்பந்தங்கள் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு முதலீட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன; பயணத் திட்டம் விரிவாகத் தயாராகி வருகிறது.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது, முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து–ஜெர்மனியில் உள்ள முக்கிய முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவும் உள்ளார். இந்தப் பயணத்தில் முதல்-அமைச்சருடன் தலைமைச் செயலர் முருகானந்தம், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட பல உயர்நிலை அரசு அதிகாரிகள் இணைந்து செல்லவுள்ளனர்.
