
தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை இன்று (மே 6) புதிய நெறிமுறைகளை அறிவித்து, அவற்றை கடைப்பிடிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாநில உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குடிநீர் சுத்திகரிப்பு முறைகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். பொதுமக்கள் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சுத்தம் செய்யப்படாத கேன்கள் பயன்படுத்த கூடாது. ஒரு கேன் சுழற்சி முறையில் அதிகபட்சம் 30 முறை மட்டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், உரிய அனுமதியின்றி பழுப்பு நிற அல்லது அடையாளமின்றி வரும் கேன்களில் குடிநீர் நிரப்பி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் காணப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் இத்தகைய தவறுகளைக் கண்டால் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் கேன்கள் பொதுமக்களின் உடல்நலத்திற்கு பெரும் ஆபத்தாக இருக்கக்கூடியது என்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து வாட்டர் கேன் நிறுவனங்களும் புதிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.