தமிழக முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 12ஆம் தேதி) சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
சோதனை அடிப்படையில் 10 மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்பட்ட இந்த திட்டம், இனி தமிழகமெங்கும் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 70 வயதுக்கு மேற்பட்ட 15.81 லட்சம் மூத்த குடிமக்கள், 1.27 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட மொத்தம் 21.70 லட்சம் பயனாளர்கள், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வீட்டிலேயே பெறவுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 34,809 ரேஷன் கடைகள் மூலம், மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் ரேஷன் விற்பனையாளர்கள் பயனாளர்களின் வீட்டுக்கே சென்று பொருட்களை வழங்குவார்கள். இதற்கான தகுதி பட்டியல் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் தயாரிக்கப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரசு தரப்பில், இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மக்கள் நலனுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்டங்களில், அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைப்பார்கள் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
