நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதிவழங்கியுள்ளது. பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என அரசாணை வெளியீடபட்டுள்ளது.
தமிழகத்தில் தெருவோரமாக சுற்றித் திரியும் நாய்கள் மூலம் ஏற்படும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் தொற்று சம்பவங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள், சிறுவர், முதியோர் உள்ளிட்டோர் மீது திடீரென தாக்குதல் நிகழும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், இது பொது சுகாதாரத்தில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமைப்பின் கவுரவ செயலாளர் ஆ.சங்கர், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில், “2022-ல் தமிழ்நாட்டில் 3,65,318 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், 2023-ல் இது 4,40,921 ஆக உயர்ந்துள்ளது. 2025-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. ரேபிஸ் காரணமாக 2017-ல் 16 பேர் உயிரிழந்ததுடன், 2024-ல் இது 47 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு 4 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நோய்வாய்ப்பட்டு மற்றும் தொற்று பரப்பக்கூடிய நிலைமை உள்ள நாய்களை, அரசு பதிவு பெற்ற கால்நடை மருத்துவர் சான்றுடன், உள்ளாட்சி அமைப்புகள் வழியாக கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த கோரிக்கையை தொடர்ந்து, மருத்துவ மற்றும் உள்ளாட்சி துறைகள் ஆய்வு மேற்கொண்டு, இதுபோன்ற நாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
