
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், 25 வயதான ருச்சிகா என்ற இளம்பெண், திருமணதம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு அவரது காதலனான சிவம் மட்டும் அல்லாமல், அவரது பெற்றோரும் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். போலீசார் 12 நாட்களில் வழக்கை தீர்த்து வைத்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மே 10ஆம் தேதி அழகு நிலையத்துக்குச் சென்று திரும்பாத ருச்சிகாவை தேடிய அவரது தந்தை தேவ், தாம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடைபெறும்போதே, மே 18-19 இரவுகளில் ராம்கங்கா ஃபீடர் சேனல் கால்வாயில் ஒரு பையில் சடலமாக மீட்கப்பட்ட அந்த பெண், ருச்சிகா என அடையாளம் காணப்பட்டார்.
உடல்நல பரிசோதனை அறிக்கையில், சுமார் 6-7 நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. விசாரணையில், சிவம் தனது காதலியான ருச்சிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதையும், ஆனால் ருச்சிகா அவரை “முதலில் அரசு வேலையில் சேருங்கள், பிறகு திருமணம்” என மறுத்ததையும் ஒப்புக்கொண்டார்.
இத்தகைய வாக்குவாதத்தின் பின்னர், கோபத்தில் தாவணியைப் பயன்படுத்தி அவரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், உடலை பெற்றோருடன் சேர்ந்து ஒரு பையில் அடைத்து ராம்கங்கா கால்வாயில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். ருச்சிகாவின் செருப்புகள் மற்றும் கொலையில் பயன்படுத்தப்பட்ட பையையும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிஜ்னோர் கிழக்கு பகுதி எஸ்.பி அமித் கிஷோர் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டாலும், ருச்சிகா அரசு வேலை கிடைக்கும்வரை திருமணத்தை தள்ளிப்போட விரும்பியதால், கொடூரமாக இந்த செயல் தொடர்ந்தது.
மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் மீது IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த ஊரை மட்டுமல்ல, மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.