அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்ததோடு இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை அவர் தரப்பினர் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளராக அங்கீகரித்தாலும் தற்போது அவருக்கு அக்னி பரீட்சை காத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தலில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் ஒருவேளை ஓபிஎஸ் தரப்பு வெற்றி பெற்றால் அது இபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிடும். இதனால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் யாருக்கு வெற்றி கிட்டும், யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் வசம் இருப்பதால் கர்நாடகா சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ஓபிஎஸ் விரைவில் தனிக்கட்சி தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தற்போது ஓ. பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு தனி கட்சி தொடங்குவது மட்டும் தான் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இதில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.