கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரம்புபாளையம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புன்னம் சத்திரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வைத்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சோபனா என்ற மகளும், அருண் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நிதி நிறுவனத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட பாஸ்கரன் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

அவரது நிதி நிறுவனமும் பூட்டி கிடந்தது. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது பாஸ்கரனுக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது மோட்டார் சைக்கிள் நின்றது. அருகே அவரது செருப்பும், விஷ மாத்திரை டப்பாவும் கிடந்ததை கண்டு உறவினர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் இறங்கி இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாஸ்கரனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாஸ்கர் நிதி நிறுவனத்தின் மூலம் வட்டிக்கு கொடுத்த பணம் சரியாக வசூல் ஆகாததால் மன உளைச்சலில் விஷ மாத்திரையை தின்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.