அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை ஈரான் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற உள்ளன. இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இந்த அதிரடி மாற்றங்கள் இரு நாடுகளுக்கு இடையே போருக்கான சூழலை உருவாக்கியுள்ளன. தொடர்ந்து 4-வது முறையாக உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ள ஈரான் அணி, தனது லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தையும் அமெரிக்க மண்ணிலேயே விளையாட வேண்டியுள்ளது. ஜூன் 15-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நியூசிலாந்துடனும், ஜூன் 21-ல் பெல்ஜியத்துடனும், ஜூன் 26-ல் சியாட்டில் நகரில் எகிப்துடனும் ஈரான் மோத வேண்டும்.

தற்போதைய சூழல் குறித்து ஈரான் கால்பந்து சம்மேளனத் தலைவர் மெஹ்தி தாஜ் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களில் நடந்துள்ள சம்பவங்கள், அமெரிக்க மண்ணில் ஈரான் அணி விளையாடுவதைச் சாத்தியமற்றதாக மாற்றியுள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உலகக்கோப்பை பற்றி சிந்திப்பது கடினம். இருப்பினும், விளையாட்டுத் துறை மேலிடமே இது குறித்து இறுதி முடிவெடுக்கும்.” எனத் தெரிவித்தார்.

பாதுகாப்பு கருதி ஈரானின் உள்நாட்டு கால்பந்து லீக் போட்டிகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து ஃபிபா பொதுச்செயலாளர் மத்தியாஸ் கிராப்ஸ்ட்ரோம் கூறுகையில், “ஈரான் தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். அனைத்து அணிகளும் பங்கேற்கும் பாதுகாப்பான உலகக்கோப்பையை நடத்துவதே எங்களது நோக்கம். இது குறித்து மூன்று நாட்டு அரசாங்கங்களுடனும் (அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா) ஆலோசித்து வருகிறோம்,” என்றார்.

ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஏவிய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை முகாம்களை அமெரிக்கப் படைகள் தகர்த்துள்ளன.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஈரானின் இந்த விலகல் முடிவு சர்வதேச விளையாட்டு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.