
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, புஞ்சை போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஏக்கர் கணக்கில் மல்லிகை, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் போன்ற பூக்களை பயிரிட்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் தினமும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்கள். அதன்படி ஒரு நாளுக்கு 5 டன் பூக்களுக்கு மேல் இந்த கிராம பகுதிகளில் விளைகிறது.
இவை மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்று வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பூக்களின் விளைச்சல் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் பூக்களின் விலை மிகவும் சரிந்து கொண்டே வருகிறது என்றும், திருமண நேரங்களில் ரூ. 500 க்கு விற்பனை செய்து கொண்டிருந்த சம்பங்கி பூக்கள் தற்போது ரூ. 10 க்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நஷ்டத்தை அடைந்த விவசாயிகள் பூக்களை பறித்து வாகனங்களில் கொண்டு வந்து ஓடைகளில் கொட்டி செல்கிறார்கள். பூக்களை பறிக்காமல் செடியில் விட்டு விட்டால் திரும்பவும் பூ பூக்காது என்பதால் பூக்களை பறித்து வந்து ஓடைகளில் கொட்டி செல்லும் விவசாயிகள் “இதை பயிரிடுவதற்காக அதிக செலவு செய்தோம். தற்போது பூக்களின் விலை சரிந்து காணப்படுவதால் மிகப் பெரிய நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளோம்” என கூறுகின்றனர். மேலும் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.