விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் போன்றவற்றை பயிரிட்டு இருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் பெய்து கனமழை காரணமாக விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, காரியாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த வெங்காயமும், 225 ஏக்கர் நெல் பயிர்களும், 100 ஏக்கர் கடலையும் தண்ணீரில் மூழ்கி நாசமானது.

வெங்காய பயிருக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததால் தற்போது மிகவும் நஷ்டத்தில் உள்ளோம். இதே போல நெல், கடலை போன்ற பயிர்களும் தண்ணீரில் மூழ்கியது. அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கி விட்டது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.