திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபட்டினம் புதூரில் விவசாயியான தண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து கொய்யா, தென்னை சாகுபடி செய்து வந்துள்ளார். அந்த வீட்டில் தண்டபாணி மனைவி பொன்னுத்தாய், மகன் முருகேசன், பேரக்குழந்தை இருந்துள்ளனர். நேற்று அதிகாலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு தண்டபாணி தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த யானை தண்டபாணியை துடிக்கையால் தாக்கி, காலால் மிதித்து விட்டு அங்கிருந்து சென்றது.

இதற்கிடையே தண்டபாணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த முருகேசன் தனது தந்தையை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி தண்டபாணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் அட்டகாசம் செய்யும் யானையை வனப்பகுதியில் விரட்டி தண்டபாணியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.