செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, தலைமைக் கழகம் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி சேலம் புறநகர் மாவட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல், பாசறை குழு, மகளிர் குழு  அமைத்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த இரண்டு மாத காலமாக இந்த  அமைப்பை மாவட்டத்தில் இருக்கின்ற பொறுப்பாளர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை விரைவு படுத்துவதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதோடு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள்,  அவருடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய  தேர்தல் முகவர் கூட்டம் பாசறை பட்டறையில்   கலந்து கொண்டு பேசுகின்ற பொழுது என்னை பற்றி பல்வேறு விமர்சனம் செய்துள்ளார்கள். அதில் ஒரு சிலவற்றை இந்த நேரத்திலே குறிப்பிடுவது பொருத்தமானது என்று கருதுகிறேன். அந்தக் கூட்டத்தின் உடைய நோக்கம் அவர்களின் கட்சி சம்பந்தப்பட்டது.

அதில் நான் தலையிட விரும்பவில்லை. தேர்தல் வருகின்ற காரணமாக வாக்கு முகவர்கள்  எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விளக்குவதற்காக இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நான் கருதுகிறேன். அதை தவிர்த்து அந்த கூட்டத்தில் பெரும்பாலும் என்னைப் பற்றி தான் அதிகமாக பேசியுள்ளார்.

குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி பொய்யர் பழனிச்சாமி என்று குறிப்பிட்டுள்ளார். நான் இதுவரை ஊடகத்திலோ… பத்திரிக்கையிலே பொய் செய்தி வெளியிட்டதாக இல்லை. என்னுடைய அறிக்கையிலும் சரி,  நான் ஊடகத்தின் வாயிலாக பேட்டி கொடுக்கின்ற பொழுதும் பொய்யான செய்தியை நான் எப்பொழுதும் கொடுத்தது இல்லை. அது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் வேண்டுமென்று திட்டமிட்டு திரு ஸ்டாலின் அவர்கள் என்னைப் பற்றி தவறாக விமர்சனம் செய்துள்ளார்,  இது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.