அ.தி.மு.க உட்கட்சி மோதல் தொடர்ந்து உச்சம்பெற்று வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற பேச்சு தமிழ்நாடு அரசியல் அரங்கில் கிளம்பி உள்ளது. இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக எப்படியும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகிவிடும். தீர்ப்பு தங்களது தரப்புக்கு சாதகமாக அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆகவே அதன் பிறகு இடைத்தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தலாம் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. இபிஎஸ் தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் அடுத்த வாரம் டெல்லி சென்று தேர்தல் ஆணையர்களை சந்தித்து இது குறித்து பேச உள்ளார். கட்சியின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி அவர் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.