மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 9-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய திருப்பமாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்த போரில் நேரடியாகக் குதித்துள்ளது.

ஈரானின் ஆக்கிரமிப்பு மற்றும் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரக விமானப்படை ஈரானின் முக்கியமான உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்கியுள்ளது.

குறிப்பாக, ஈரானின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு ஆலை (Desalination Plant) மீது அமீரகப் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்துள்ளதாக இஸ்ரேலிய செய்தி இணையதளமான ‘Ynet’ அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 2-ம் தேதி துபாயின் ஜெபல் அலி துறைமுகம் மற்றும் குடிநீர் ஆலைகளுக்கு அருகே ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே அமீரகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

“நாங்கள் எதற்கும் தயார்” என்பதை ஈரானுக்கு உணர்த்தும் ஒரு எச்சரிக்கையாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் தாண்டி, இப்போது ஒரு அண்டை நாடான அமீரகமும் போரில் இறங்கியிருப்பது ஈரானுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை ஈரான் மீண்டும் அமீரகத்தைத் தாக்கினால், இன்னும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் இன்னும் கருமையடைந்துள்ளன.