சென்னை மாவட்டத்தில் உள்ள அடையார் கஸ்தூரிபாய் நகர் 3-வது தெருவில் தனியார் நிறுவன ஊழியரான கார்த்திக் நரேன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் பெற்றோர் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திக்கின் பெற்றோர் காசிக்கு புனித யாத்திரை சென்று விட்டு நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வந்தனர். முன்னதாக கார்த்திக் தனது பெற்றோர் வருவதால் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்க சென்றார்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த பெற்றோர் படுக்கை அறையில் ஒரு நபர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் வில்லிவாக்கம் ஜி.கே.எம் காலனியைப் சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஏழுமலை என்பது தெரியவந்தது.

இவர் வீட்டில் இருந்த 42 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 20 யூரோ கரன்சி நோட்டுகளை திருடியுள்ளார். இதனையடுத்து பசி எடுத்ததால் பிரிட்ஜை திறந்து அதில் இருந்த சாக்லேட்டுகளை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மது அருந்திய போதை தலைக்கேறியதால் மயக்கத்தில் திருடிய வீட்டிலேயே தூங்கியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஏழுமலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.