சென்னை மாவட்டத்தில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் இருக்கும் உடற்கல்வி இயல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி இருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் 23 வயதுடைய மாணவி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது கடந்த டிசம்பர் மாதம் பாலியல் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜார்ஜ் ஆபிரகாம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் ஜார்ஜ் ஆபிரகாம் முன்ஜாமீன் பெற்றார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடற்கல்வியியல் பயிற்சி மாணவ,மாணவிகள் கல்லூரி வளாகத்தில் கடந்த மாதம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் 8 பேர் அடங்கிய விசாரணை கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயதுடைய மாணவி உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தனது அழகை வர்ணித்து ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து விசாரணை கமிட்டியின் பரிந்துரை பேரில் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜார்ஜ் ஆபிரகாம் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் உடற் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் தங்கியிருந்த ஜார்ஜ் ஆபிரகாமை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.