
அமெரிக்காவில் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு(CBP) அதிகாரிகளால் தற்போது நடத்தப்படும் ஆய்வு குறித்து அந்நாட்டு குடியேற்ற வழக்கறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது வயதான இந்தியர்கள் நீண்ட கால கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் இரண்டாம் நிலை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு இரவு முழுவதும் காவலில் வைக்கப்படுவது மற்றும் அமெரிக்க விமான நிலையங்களில் தங்கள் சட்ட பூர்வ அந்தஸ்தை ஒப்படைக்க அழுத்தம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடியேற்ற வழக்கறிஞர்கள் ராஜிவ் எஸ். கண்ணா மற்றும் கிருபா உபாத்யாய், ஸ்னேஹல் பாத்ரா ஆகியோர் கூறுவது, கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது அட்டைகளை இவ்வாறு அழுத்தம் ஏற்படும் போது ஒருபோதும் ஒப்படைக்க கூடாது. ஒரு தனி நபரின் கிரீன் கார்டை எல்லையில் ரத்து செய்ய முடியாது. இது ஒரு நீதிமன்றத்தால் மட்டுமே அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் பயணிகள் ரத்து செய்யக்கோரி அழுத்தம் கொடுப்பதால் எந்த ஒரு கையெழுத்தும் இடக்கூடாது.
அவ்வாறு எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திட்டால் கிரீன் கார்டு உரிமையை இழக்க நேரிடும். அதாவது ஒரு கிரீன் கார்டு வைத்திருப்பவர் 365 நாட்களுக்கு மேல் அமெரிக்காவிலிருந்து வெளியேறியிருந்தால் அவர்கள் தங்கள் வசிப்பிடத்தை கைவிடப்பட்டதாக கருதப்படுவார்கள். ஆனால் தற்போது குறுகிய கால இடைவெளிகள் கூட அதிக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
பயணிகள் தங்களது சொத்து ஆவணங்கள், வரி பதிவுகள், வேலை சான்றிதழ் போன்ற ஆதாரங்களை வைத்திருப்பதன் மூலம் குடியுரிமை இழக்கப்படுவது தவிர்க்க முடியும். குறிப்பிட்ட இடைவெளிக் காலமாக அமெரிக்காவில் வசிக்காதவர்களை தொடர்ந்து CBP அதிகாரிகள் குறிவைத்து சோதனை நடத்தி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.