கர்நாடகா மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி இளைஞர் ஒருவரை காதலித்தது வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2021-ம் வருடம் சிறுமி தன் காதலனுடன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி கண்டுபிடித்தனர். அப்போது சிறுமிக்கு 18 வயது நிரம்பாத காரணத்தால் இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். அதன்பின் ஜாமீனில் வெளியில் வந்த இளைஞர், சிறுமிக்கு 18 வயது முடிவடைந்ததும் அவரை திருமணம் செய்துகொண்டார்.

இதற்கிடையில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இவர்களுக்கு குழந்தை பிறந்ததாக தெரிகிறது. அதே நேரம் போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி இளைஞர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கு நேற்று(பிப்.13) விசாரணைக்கு வந்தபோது, இருவரும் திருமணம் செய்துகொண்டதால் போக்சோ வழக்கை ரத்து செய்யும்படி இளைஞர் தரப்பில் கோரப்பட்டது. மேலும் இளம்பெண் சிறுமியாக இருந்தபோது தன் விருப்பத்தின் பேரிலேயே இளைஞருடன் சென்றார் எனவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை ரத்துசெய்ய பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் ஒப்புதல் தெரிவித்தார். இதனை பதிவுசெய்த நீதிமன்றம் தம்பதியினர் மற்றும் அவர்களது குழந்தையின் எதிர்காலத்தை கருதில் இளைஞர் மீதான போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை ரத்துசெய்து தீர்ப்பு வழங்கியது.