
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவின் கடும் எதிர்வினைக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் நாடு முழுவதும் உள்ள அனைத்து எஃப்எம் வானொலி நிலையங்களிலும் இந்திய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவதை முற்றிலுமாக தடை செய்துள்ளது.
பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த முடிவை “தேசபக்தியின் அடையாளம்” என்று குறிப்பிடுவதோடு, “நாட்டின் உணர்வுகளுக்கு ஏற்ப ஊடகங்கள் எடுத்துள்ள சரியான நடவடிக்கை இது” என புகழ்ந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு முன்னதாக, இந்திய அரசு பல பாகிஸ்தான் கலைஞர்களின் இன்ஸ்டாகிராம், யூடியூப் கணக்குகளை தடை செய்திருந்தது.
குறிப்பாக, இந்தியாவில் பெரிதும் விருப்பம் பெற்ற பாகிஸ்தான் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் டிஜிட்டல் உள்ளடக்கங்களை ஸ்ட்ரீமிங் செய்யும் யூடியூப் சேனல்கள் தற்போது இந்தியாவில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் பாகுபாடான அணுகுமுறைகளும் கலாசார அடிப்படையிலான பதிலடியும் இருநாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்கின்றன.
பாகிஸ்தான் மக்கள் ஒருகட்டமாக இந்த முடிவை வரவேற்பதோடு, இது நாட்டின் பாதுகாப்பையும், தேசிய இனம் சார்ந்த உணர்வுகளையும் பிரதிபலிக்கும் நடவடிக்கை என பலர் வலியுறுத்துகின்றனர். ஆனால், பல பாகிஸ்தானிய இசை ரசிகர்கள் இந்த முடிவால் பாதிக்கப்படுவதாகவும், கலாசார கலை பரிமாற்றங்களை அரசியல் காரணங்களுக்காக முடக்கியது வருத்தம் அளிக்கிறது என்றும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா – பாகிஸ்தான் உறவுகள் மீண்டும் பதற்றமடைந்துள்ள சூழலில், இந்த முடிவுகள் எதிர்கால கலாசார பரிமாற்றங்களிலும் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.