மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பிபிஓ நிறுவனத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் பணி இடத் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக, தலைமறைவாக இருந்த எச்.ஆர் மேலாளர் நிதா கான் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி போலீஸாரிடம் சிக்கிய அவர், தற்போது நாசிக் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தீவிர விசாரணையில் உள்ளார்.
ஒரு நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், பாலியல் தொல்லைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வேண்டிய பொறுப்பில் இருந்த நிதா கான், குற்றவாளிகளுக்குத் துணையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பெண் ஊழியர்கள் அளித்த பல புகார்களை நிதா கான் திட்டமிட்டு மறைத்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி அமைதிப்படுத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பூனே மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், நிதா கானை மடக்கினர்.
தற்போது அவர் மீது குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிஸ்டமேட்டிக் ஃபெயிலியர் எனப்படும் நிர்வாகத் தோல்வி ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
