நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள குறு ம்புகாரர்களின் வினோதமான செயல் இணையத்தை கலக்கி வருகின்றது. பீகார் மாநில அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆன்லைன் மூலம் தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி நிறைவு செய்தது. அப்போது ஏராளமான விண்ணப்பங்கள் வந்தன. அதில் ஒரு விண்ணப்பம் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர் டாமி. தாயின் பெயர் ஜிம்மி. தந்தையின் பெயர் ஷேடோ. பாலினம் ஆண் என்று குறிப்பிட்டுள்ளதுடன் தச்சர் சாதி, ஜாதி வரிசை எண் 113 என்றும் தான் மாணவன் பிறந்த தேதி 2022 ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரரின் முகவரியாக பாண்டே போக்கர் கிராமம், ரகுனா பஞ்சாயத்து, வார்டு எண் 13, குராரு வட்டம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த விவரங்களுக்கு சான்றாக நாய் புகைப்படம் இடம்பெற்ற போலியான ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் திகைப்பும் குழப்பமும் அடைந்தனர். அதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த நபர் தற்போது கண்டறியப்பட்டுள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.